Monday, April 7, 2008

சிந்தனைத் துளி

நம்மவரிடையே இருக்கும் சில வேடிக்கையான பழக்கங்களில் இதுவும் ஒன்று. ஒரு விசேஷம் என்று வந்துவிட்டால், அதில் இன்னார் இவ்வளவு மொய் வைத்தார்ர், இன்னார் இந்த பரிசுப் பொருள் கொடுத்தார் என லிஸ்ட் போட்டு வைத்து கொண்டு, பின்னர் அவரவர் வீடுகளில் நிகழ்ச்சிகள் வரும்போது அவர் செய்த அளவிற்கு மீண்டும் திருப்பிச் செய்வது. முதன் முதலில் இப்படி ஒரு பழக்கத்தை பார்த்த போது வேடிக்கையாக இருந்தது. உறவாக இருந்தாலும் நட்பாக இருந்தாலும், அன்பின் அடிப்படையில் அல்லவா கொடுக்கும் பொருளோ பரிசோ அமையவேண்டும்? (அதற்காக, அன்பு என்பது கொடுக்கும் பரிசின் அளவில் இருக்கின்றது என்று சொல்லவில்லை). உண்மையான அன்போடு வாங்கி கொடுக்கும் ஒரு பத்து காசு மிட்டாயின் மதிப்பு கடனுக்காக கொடுக்கும் நூறு வெள்ளி பரிசுப் பொருளுக்கு ஈடாகுமா?

இப்பழக்கத்தைப் பற்றி கேட்ட போது, அதாவது விருப்பம் இல்லாமல், 'அவர் செய்தார்' என்பதற்காக செய்யவில்லை. சில நேரங்களில், அவர் செய்த அளவிற்கு மேலாக செய்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அவர் செய்ததை விட குறைவாக செய்தால் நன்றாக இராது எனும் பதில் வந்தது. இந்த கூற்றிலும் உண்மை இருக்கிறது. திருமணம் முடிந்த மறுமறுநாட்களில் அந்த வீட்டினரை சந்திக்கும் போது, ' நான் அவள் பெண்ணின் கல்யாணதிற்கு 100 வெள்ளி மொய் வச்சேன். ஆனா இவ எங்க வீட்டு கல்யாணதுக்கு 25 வெள்ளி மட்டும் வச்சிடு போறா' எனும் பேச்சுகள் காதில் வந்து விழும். சிரிப்பாக இருக்கும். அதே நேரத்தில் இப்படிபட்ட குறுகிய மனப்பான்மை என்று மாறப்போகிறது என்ற ஆதங்கமும் ஏற்படும்.

ஒருவருக்கு கூறும் வாழ்த்துகளோ கொடுக்கும் பரிசுகளோ அன்பின் அடிப்படையில் அமைய வேண்டும். இன்னும் சொல்லப் போனால் எந்த வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்யப் பட வேண்டும். எதிர்பார்புகள் இல்லாமல், 'என் மனதிற்கு பிடித்திருக்கின்றது, அதனால் உனக்கு நான் செய்கிறேன்' என்ற எண்ணத்தோடு செய்யும் போது, ஏமாற்றங்கள் இருக்க்காது. ஆனால் எதிர்பார்புகள் இல்லாமல் செய்வது எல்லோராலும் முடியாது. என்ன இருந்தாலும் நாம் எல்லோரும் மனிதர்கள் தானே? நான் என் நண்பரின் பிறந்த நாளை நினைவு வைத்து வாழ்த்து கூறுகிறேன். ஆனால், என் பிறந்தநாளன்று அவரிடம் இருந்து வாழ்த்து வரவில்லை என்றால், ஏமாற்றமும் வருத்தமாகவும் தான் இருக்கும். ஒரு வகையில் பார்க்கப் போனால், இந்த ஏமாற்றமும் அன்பின் வெளிப்பாடுதான். ஆக முழுக்க முழுக்க எதிர்பார்புகள் இல்லாமல் ஒருவருக்கு செய்யமுடியாவிட்டாலும், கணக்கு பார்காமல் செய்யலாமே? அதே போல், அந்த பரிசைப் பெறுபவர்களும் கணக்கு பார்க்காமல், வாங்கினால் சிறப்பாக இருக்கும். எனது சிந்தனையில் மலர்ந்த சிறு துளி. சிந்தித்துப் பார்போம்.....

No comments: