Saturday, November 22, 2008

தாயுமானவன்



அண்மையில் படித்த மிக அழகான கதை.

கதையை எழுதியவர் வித்யா சுப்ரமணியம். இவரது கதைகளை எப்பவும் விரும்பி படிப்பேன். முற்போக்கு சிந்தனையோடு எழுதக் கூடியவர். எந்த ஒரு சூழ்நிலையையும் ஒரு வித்தியாசமான கோணத்தில் இருந்து பார்க்கக்கூடியவர். சாதாரணமாக வரும் கதைகளைப் போல் சிக்கலில் மாடிக்கொண்டிருக்கும் பெண்ணை ஆண் காப்பாற்றுவது போலவும், அரைத்த மாவை அரைக்கும் காதல் கதைகளும் எழுதாமல் ஆண் பெண் இருவரின் உணர்வுகளையும் மிக அழகாக வர்ணித்து எழுதக் கூடியவர்.

நூலகத்திலிருந்து அம்மா தான் இந்த புத்தகதை இரவல் வாங்கி வந்தார். முதலில் மேசை மேல் இந்த புத்தகத்தை பார்த்த போது 'தாயுமான' என்ற வார்த்தைகள் மட்டும் தான் தெரிந்தது. கடைசி எழுத்து நூலக barcodeஆல் மறைக்கப்பட்டிருந்தது. 'தாயுமானவள்' என்பது தான் தலைப்பாக இருக்கும் என நான் யூகித்து கொண்டு புத்தகத்தை கையில் எடுக்க, தாயுமானவன் என்ற தலைப்பை பார்த்ததும் சற்று வியப்படைந்தேன்.





ஒரு தந்தையின் அன்பை வெளிகொணரும் புத்தகம் தான் இது. ஒரு பெண் குழந்தையை ஆணால் தனியாக வளர்க்க முடியாது என் சுற்றி இருப்பவர்கள் கூற அதையெல்லாம் பொருட்படுத்தாது, அந்தக் குழந்தையை தந்தையாகவும், தாயாகவும் (ஆதலால், தாயுமானவன்) தோழனாகவும் வளர்க்கும் ஒரு தந்தையின் கதை. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் உறவை மிக எளிதாக, அழகாக சொன்ன பெருமை எழுத்தாளரைச் சேரும். இந்தப் பெண் குழந்தையாக இருந்த போது சுற்றி இருக்கும் மற்ற குழந்தைகளைப் போல் தாய் வேண்டும் என கேட்கும் போது அந்த தந்தை புடவை ஒன்றை உடுத்திக் கொண்டு, நான் தான் உன் தாய் என அந்தக் குழந்தையை சமாதானப் படுத்துகிறார். அதே குழந்தை வளர்ந்து பெண்ணாகி பூப்படையும் போது இதே போல் புடவை உடுத்திக் கொண்டு ஒரு தாயாக இருந்து அந்தப் பெண்ணுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லித்தருகிறார். அதைப் படிக்கையில் விழிகளில் நீர் படர்ந்தது. எவ்வளவு அழகாக இந்த தந்தை கதாபாத்திரத்தை எழுத்தாளர் வடித்திருக்கிறார்......




இதே தந்தை கணவனாக தன் மனைவியின் மீது காட்டிய அன்பும், அந்த மனைவிக்காக செய்த தியாகமும், அதற்காக அவர் அனுபவித்த தண்டனையும் மிக அழகாக எழுதப்பட்டிருந்தது.

ஆக மொத்ததில் பல நாட்கள் கழித்து ஒரு அருமையான நாவல் படித்த திருப்தி. இந்த கதாபாத்திரத்தில் வருபவரை போல் ஒரு தந்தையோ, கணவரோ கிடைப்பாரென்றால், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் ஒரு பெண் தவமிருக்கலாம்.

No comments: